நாட்டு நடப்பு - Top 7 | வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் To ராகுல் யாத்திரைக்கு மணிப்பூர் அரசு அனுமதி!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மாலை செய்திகள்
மாலை செய்திகள்PT

1. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்!

ஊதிய உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து இடதுசாரிகள் மற்றும் அண்ணா தொழிற்சங்க கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பேருந்துகளை இயக்காமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தநிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா புர்வாலா அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுத் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், போராட்டம் நடத்த உரிமை உள்ளதாகவும், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது எனவும் தெரிவித்தனர். இருதரப்பினரும் ஏன் பிடிவாதமாக இருக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தீர்வு காண்பதில் என்ன பிரச்னை உள்ளது என வினவினர். வேலைநிறுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள்தான் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை 19ஆம் தேதிவரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும், நாளைக்கு பணிக்கு திரும்புவதாகவும் தொழிற்சங்கங்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. பணிக்கு வரும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், பணிக்கு திரும்பும் போக்குவரத்து கழக ஊழியர்களை அனுமதிக்க வேண்டுமென அரசுக்கு ஆணையிட்டனர்.

நீதிமன்றத்தின் அறிவுறுத்தின்பேரில் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமிழக அரசின் முடிவைத் தொடர்ந்து 20-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

2. குஜராத்தில் மிகப்பெரிய பசுமை எரிசக்தி பூங்கா - கவுதம் அதானி

குஜராத் தலைநகர் காந்தி நகரில் வைப்ரன்ட் குஜராத் என்ற பெயரில் சர்வதேச வர்த்தக மாநாடு தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி இம்மாநாட்டை தொடங்கி வைத்தார். 34 நாட்டு அரசுகள் பங்குதாரர் நாடுகளாக உள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நஹ்யான் உள்ளிட்ட 130 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகளின் படிநிலைகள் வேகமாக மாறி வரும் நிலையில் இந்தியா உலகின் நண்பனாக உருவெடுத்து வருவதாக பேசினார். இந்தியா உலகின் 3 பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக அடுத்த சில ஆண்டுகளில் உருவெடுக்கும் என பெரும்பாலான பொருளாதார மதிப்பீட்டு நிறுவனங்கள் கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சியடைந்ததாக மாற்றுவதே தங்கள் அரசின் பிரதான இலக்கு என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நிகழ்வில் பேசிய தொழிலதிபர் கவுதம் அதானி தங்கள் நிறுவனம் குஜராத்தில் மேலும் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்ய உள்ளதாகவும் தாங்கள் அமைக்க உள்ள பசுமை எரிசக்தி பூங்காக்கள் விண்வெளியிலிருந்து பார்த்தாலும் தெரியும் என்றும் தெரிவித்தார். இந்த ஆலைகள் மூலம் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகிலேயே ஒரே இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய இரும்பு ஆலையை 2029ஆம் ஆண்டிற்குள் குஜராத்தில் அமைக்கப்போவதாக ஆர்சிலார் மிட்டல் நிறுவனத்தின் செயல் தலைவர் லட்சுமி மிட்டல் தெரிவித்துள்ளார். இதில் ஆண்டுக்கு 2.4 லட்சம் டன் இரும்பு உற்பத்தி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

3. ”ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா” - மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர்!

ஏக்நாத் ஷிண்டே அணி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை ஏற்க முடியாது என்றும், ஏக்நாத் ஷிண்டேவை சட்டமன்றக்குழு தலைவர் பதவியிலிருந்து நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை எனவும் மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஷிண்டே அணிக்கு தாவிய எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க மகாராஷ்டிரா சபாநாயகர் தாமதிப்பதாக உத்தவ் தாக்கரே தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து, ஜனவரி 10-ஆம் தேதிக்குள் இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர சபாநாயகர் ராகுல் நார்வேகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 2022ம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே அணி எம்.எல். ஏ.க்களை உத்தவ் தாக்கரே நீக்கியதை ஏற்க முடியாது என ராகுல் நார்வேகர் தெரிவித்துள்ளார். கட்சித்தலைவரின் விருப்பத்தை, கட்சியின் ஒட்டுமொத்த விருப்பமாக கருதமுடியாது எனக்கூறிய சபாநாயகர், ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என திட்டவட்டமாக அறிவித்தார்.

4. சென்னையில் 40% பள்ளி மாணாக்கர்கள் உடல் பருமன் கொண்டவர்கள் - ஆய்வில் தகவல்

சென்னையில் உள்ள பள்ளிகளில் தனியார் மருத்துவமனை ஒன்று கடந்த 2022ஆம் ஆண்டு மாணவ,மாணவிகளின் உடல் எடை குறித்த ஆய்வை நடத்தியது. அதில் 5 முதல் 17 வயதுக்குட்பட்ட, அனைத்து சமூக, பொருளாதார பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். அந்த ஆய்வு முடிவுகள் தற்போது சர்வதேச மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. இதில் 59.3% மாணாக்கருக்கு உடல் எடை சரியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 21.08% பேருக்கு அதிக எடை இருப்பதாகவும் 19.5% பேர் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களை விட சென்னையில் உடல் எடை பிரச்னை, உடல் பருமன் அதிகமாக உள்ளதாகவும் மருத்துவ இதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் புட் மோகம், மின்னணு சாதன பயன்பாடு, உடல் செயல்பாடுகள் குறைவு, கல்வியில் கூடுதல் கவனம் போன்றவை உடல் பருமன் பிரச்னைக்கு முக்கிய காரணங்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை போன்ற மாநகரத்தில் மிகக்குறை மாணவ,மாணவிகளே

ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தாலும் இது ஓர் எச்சரிக்கை மணி எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்

5. ”ராமர் கோயிலை முழுவதும் கட்டிமுடிப்பதற்கு முன்னால், அரசியல் லாபத்திற்காக பாஜக மற்றும் ஆர்.எஸ். எஸ் திறக்கிறது” - காங்கிரஸ்

ராமர் கோயிலை முழுவதும் கட்டிமுடிப்பதற்கு முன்னால், அரசியல் லாபத்திற்காக பாஜக மற்றும் ஆர்.எஸ். எஸ் திறக்கவிருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராமர் கோயில் திறப்பில் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் பங்கேற்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க கடந்த மாதம் அழைப்பிதழ் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார். அரசியல் திட்டமாக அயோத்தியில் ராமர் கோயிலை பாஜகவினர் கட்டி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், கட்டிமுடிக்கப்படாத கோயிலை அரசியல் லாபத்துக்காக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திறக்கவிருப்பதாக விமர்சித்த அவர், பல லட்சக்கணக்கான மக்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் வருகிற 22-ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது.

6. சீனாவுடன் உறவை வலுப்படுத்தும் மாலத்தீவு!

இந்தியா இடையே உரசல் போக்கு தொடரும் நிலையில் சீனாவுடன் இணைப்பை பலப்படுத்த மாலத்தீவு அதிபர் பல்வேறு உத்திகளை முன்னெடுத்துள்ளார். இருநாடுகளுக்கு இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 5 நாள் பயணமாக சீனா சென்றுள்ள அவர், வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். மேலும் சீனாவை நெருங்கிய கூட்டாளி என்றும் மாலத்தீவின் வளர்ச்சிக்கான நட்பு நாடுகளில் சீனாவும் ஒன்று எனவும் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு முன் மாலத்தீவின் முதன்மை சந்தையாக சீனா இருந்ததாகவும் இந்த நிலையை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் மாலத்தீவு அதிபர் தெரிவித்துள்ளார். முகமது முய்சு இம்மாத இறுதியில் இந்தியாவுக்கும் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

7. ராகுல் காந்தி யாத்திரைக்கு மணிப்பூர் அரசு அனுமதி!

மணிப்பூர் இம்பால் பகுதியில் இருந்து மும்பை வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ள திட்டமிட்டிருந்த ‘பாரத் நியாய யாத்ரா’வின் தொடக்க நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்துள்ளது மணிப்பூர் அரசு

ஜனவரி 14 - மார்ச் 20 வரையிலான இந்த யாத்திரை மூலம் நடைபயணம் மூலமாகவும் சில இடங்களில் பேருந்து மூலமும் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார் ராகுல். முதலில் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், குறைவான தொண்டர்களுடன் யாத்திரையை நடத்துமாறு மணிப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com