தினகரன் தரப்பில் ஆதாரம் எதுவுமில்லை; சின்னம் எங்களுக்கே: ஈபிஎஸ் ஓபிஎஸ் அணி நம்பிக்கை
இரட்டை இலை விசாரணையை தேர்தல் ஆணையம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ள நிலையில், தினகரன் தரப்பில் எவ்வித ஆதராமும் இல்லை எனவும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்றும் ஈபிஎஸ் ஓபிஎஸ் அணியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் தரப்பு கே.பி.முனுசாமி கூறுகையில், “தினகரன் தரப்பிடம் எந்த வித ஆதாரமும் இல்லை. இல்லாத ஊருக்கு அவர்கள் வழி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்கள் தரப்பில் முழுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிமுகவின் அனைத்து பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் எங்கள் தரப்பிற்காக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். எனவே ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அணியான எங்கள் அணிக்கே இரட்டை இலைச் சின்னம் உறுதியாக ஒதுக்கப்படும் என்பது வாதத்தின் மூலம் தெரிகிறது.” என்றார்.
மைத்ரேயன் எம்.பி.கூறுகையில், “தேர்தல் ஆணையம் அனைவரையும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யச் சொன்னார்கள். நாங்கள் 1,877 பிரமாணப்பத்திரங்கள் தாங்கள் செய்தோம். ஆனால் சசிகலா, தினகரன் தரப்பினர் ஒரு பிரமாணப்பத்திரம் கூட தாக்கல் செய்யவில்லை. அதற்கு நேர்மாறாக எங்களுடைய பிரமாணப்பத்திரங்களில், இது சரியில்லை, அது சரியில்லை என சின்னச் சின்னக் குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். அதுகூட அவர்களாக சொல்லும் குற்றச்சாட்டுகள்தான், உண்மையானது அல்ல. அதனால் அவர்களிடம் ஆவணங்கள் மூலம் மோதும் தகுதியில்லை. அத்துடன் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பிக்கள். எம்.எல்.ஏக்கள் என யாருடைய ஆதரவும் அவர்களிடம் இல்லை.” என்று கூறினார்.
தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி கூறுகையில், “23ஆம் தேதி ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் அணியினர் பதில் மனு தாக்கல் செய்யவுள்ளனர். தேவைப்பட்டால் நாங்கள் அதற்கு எதிர் மனு தாக்கல் செய்வோம். இல்லையென்றால் நாங்கள் அன்றைக்கே சாட்சிகளை விசாரிக்க தயாராக இருக்கிறோம். எங்களிடம் 6 சாட்சிகள் அல்ல, அதற்கு மேலான சாட்சிகள் உள்ளன. ஆனால் அந்த சாட்சிகளை நாங்கள் 6 பேராக கொடுத்துள்ளோம்.” என்றார்.

