பெரும்பான்மையை நிரூபிக்க இபிஎஸ்க்கு உத்தரவிட வேண்டும்: ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம்
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிடுமாறு ஆளுநரை காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக, திமுகவைத் தொடர்ந்து காங்கிரசும் ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் ராமசாமி எழுதியுள்ள கடிதத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக, டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததைத் சுட்டிக்காட்டியுள்ளார். பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் அரசியல் சாசன சட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் எஸ்ஆர் பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் கடிதத்தில் ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு தாமதமாகும் பட்சத்தில் குதிரைபேரங்கள் நடக்கும் சூழல் ஏற்படும் என்பதால், சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிடுமாறு தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இதே சூழலில் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் உத்தரவிட்டதையும் ராமசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

