இரட்டை இலையை மீட்க ஈ.பி.எஸ்.,ஓ.பி.எஸ் அணி டெல்லி பயணம்
அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்க பழனிசாமி அணியின் முக்கிய நிர்வாகிகள் டெல்லி செல்லவுள்ளனர்.
அதிமுக அம்மா, புரட்சித்தலைவி அம்மா அணிகள் சார்பில் நேற்று நடந்த பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அதிமுக பொதுச் செயலாளருக்கு உரிய அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிமுக அம்மா, புரட்சித் தலைவி அம்மா அணிகள் இணைப்புக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதால், தீர்மான நகல்களை தேர்தல் ஆணையத்தில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்காக கட்சி நிர்வாகிகள் சிலர் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தை அணுக நேரம் கேட்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, தங்கள் அணிக்கு கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை வழங்கக்கோரி அதிமுக அம்மா, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை திரும்பப் பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. மேலும், பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்ட, கட்சி விதிகளின் மாற்றங்களை ஏற்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.