வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறோம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் பேட்டி
இரட்டை இலை சின்ன வழக்கில் கிடைத்த வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குவதாக ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர் ஆகியவற்றுக்கு முதல்வர் அணி, டிடிவி அணி உரிமைகோரிய நிலையில் தேர்தல் ஆணையம் இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது. 83 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில், அஇஅதிமுக என்ற பெயரை இனி முதலமைச்சர் அணி பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய தீர்ப்பிற்கு பின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சென்றனர். அங்கு ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்திருந்தனர். அப்போது இரட்டை இலை சின்னம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். முதலமைச்சர் பழனிசாமியும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் சார்பிலான கூட்டறிக்கையை அமைச்சர் ஜெயக்குமார் வாசித்தார். ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக எஃகு கோட்டையாக விளங்குகிறது எனவும் இரட்டை இலை கிடைத்ததன் மூலம் ஜெயலலிதாவின் ஆன்மா தங்களுக்கே ஆதரவாகவே உள்ளதாகவும் அவர் கூறினார். ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் நாம்தான் என்பது தீர்ப்பு மூலம் நிரூபணமாகி உள்ளதாகவும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, "எதிர்க்கட்சியினரோடு கூட்டு சேர்ந்து சதி செய்தவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்ப்பு. தேர்தல் ஆணையம் நீதி, உண்மை, தர்மத்தை நிலைநாட்டி உள்ளது. ஆட்சியை கவிழ்க்கலாம் என்று நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடியாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு உள்ளோம். தேர்தல் ஆணைய தீர்ப்பின்படி டிடிவி தினகரன் அதிமுகவின் உறுப்பினர் கூட கிடையாது. ஜெயலலிதா மறைந்த 05-12-2016 ஆம் தேதியில் தினகரன் கட்சியில் இல்லை" என்றார்.
பின்னர் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், "கட்சிக்கு ஏற்பட்ட சோதனைகளுக்கு பின் தேர்தல் ஆணைய தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகள் இணைந்து அதிமுகவை வழி நடத்திச் செல்வோம். அதிமுகவின் பொதுக்குழு, எம்எல்ஏ, எம்.பி.க்கள் ஆதரவுடன் சின்னம் கிடைத்துள்ளது. எங்களுக்கு பின்னாலும் யாரும் இல்லை. முன்னாலும் யாரும் இல்லை" என்றார். பின்னர் இரட்டை சிலை சின்ன வழக்கில் கிடைத்த வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குவதாக ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.