விசாரணை ஆணையத்தால் பலன் உண்டா? - என்ன சொல்கிறது வரலாறு?

விசாரணை ஆணையத்தால் பலன் உண்டா? - என்ன சொல்கிறது வரலாறு?
விசாரணை ஆணையத்தால் பலன் உண்டா? - என்ன சொல்கிறது வரலாறு?

“விசாரணை ஆணையம்” - பெரும்பாலானவர்களுக்கு இது பழகிப் போன பெயர் தான்.  கலவரம், போராட்டம், உயிரிழப்பு, ஊழல்  என எது நடந்தாலும் அல்லது பிரச்னைக்குரிய நேரங்களில் அரசால் அமைக்கப்படுவதுதான் விசாரணை ஆணையம். ஆணையம் என்ன காரணத்திற்காக அமைக்கப்பட்டதோ அது குறித்து விசாரணை மற்றும் ஆய்வு செய்து அதற்கான காரணங்களையும் சில  பரிந்துரைகளையும் முன் வைக்கும்,   ஆணையத்தின் தலைவராக யாரை நியமனம் செய்ய வேண்டும் என்பது குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளும். அதே போல ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு கேட்டு தான் ஆக வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை விதிமுறைகளும் கிடையாது.

ஓய்வு பெற்ற நீதிபதி , அதிகாரிகளை கொண்டு எத்தனையோ விசாரணை ஆணையங்கள் இதுவரையில் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் தமிழகத்தில் 4 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் சந்தித்த முக்கிய விசாரனை கமிஷன்களில் கவனிக்கத்தக்கவை ஜெயின் மற்றும் வர்மா கமிஷன்கள். 1991 ஆம் ஆண்டு மே 21 தமிழகமே அதிர்ந்தது. தமிழகத்தில் நடந்த நிகழ்வால் இந்தியாவே அதிர்ச்சி அடைந்தது. அந்த நாள் ஒரு சாமானிய மனிதன் கூட தன் நித்திரையை தவிர்த்திருப்பான்.  தமிழகம் வந்த பிரதமர் ராஜீவ் காந்தி அன்று  படுகொலை செய்யப்பட்டார். என்ன எப்படி என்று யோசிப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.  மீண்டு வர முடியாத ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை தமிழகம் அன்று சந்தித்தது. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டன.  ஒன்று; வர்மா கமிஷன். மற்றொன்று; ஜெயின் கமிஷன். 

ராஜீவ் காந்தி படுகொலைக்கு எவ்வளவோ காரணங்கள் கூறப்பட்டாலும் அவருக்கு தரப்பட்ட பாதுகாப்பு குறித்து விமர்சனங்கள் அப்போது எழுந்தன. எனவே அது குறித்தும்  இந்தக் கொலைக்கான சதித் திட்டம் குறித்தும் விசாரிக்க அமைக்கப்பட்டது தான் வர்மா கமிஷன்.  இந்த கமிஷன் அமைக்கப்படும் போது  சிறப்பு புலனாய்வுக் குழுவும் தன் விசாரணையை தொடந்திருந்ததால் சதித் திட்டம் குறித்து விசாரிக்காமல் பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி மட்டும் விசாரிப்பதாக வர்மா கமிஷன் கூறியது. அந்த வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உளவுத்துறை செயல்பாடுகள் குறித்த விசாரித்த வர்மா கமிஷன் தன் அறிக்கையை 1992 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு தந்தது 

முன்னதாக 1991 ஆம் ஆண்டே  ஆகஸ்ட் மாதம் நீதிபதி எம் சி ஜெயின் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது இது ராஜிவ் கொலைக்கான சதிதிட்டம் போன்றவற்றை விசாரிக்க தொடங்கியது. சிறப்பு புலனாய்வு படை போன்றே அனைத்து தரப்பிலும் விசாரணை மேற்கொண்ட  ஜெயின்  கமிஷன் 1997 ஆம் ஆண்டு தன் அறிக்கையை சமர்ப்பித்தது. இப்போது வரை அதன் பரிந்துரைகளில் எது குறித்தும் முறையான உரிய கால அளவிலான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.

1995 ஆம் ஆண்டு திருநெல்வேலி விருதுநகர் மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலரமாக வெடித்தது. இதில் ஏராளமானோர் காயமடைந்தார்கள். பேருந்துகள் தாக்கப்பட்டன. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற தென் மாவட்டங்களில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோமதி நாயகம் தலைமையில் விசாரிக்க தமிழக அரசு ஆணையம் அமைத்தது

1999 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரம் வட்டத்தில் உள்ள மாஞ்சோலை தோட்டத்தில் பணபுரிந்து வந்த தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கி வரும் நாள் கூலியை உயர்த்தி தரும்படி பணிபுரிய கூடிய நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்தவர்களை விடுதலை செய்யக் கோரி மற்ற தொழிலாளர்கள் போராட்டம் மேற்கொண்டார்கள். போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகையும் வீசினர். இத்தகைய சூழலில் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து ஓடியவர்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்கினர். அப்போது ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டதுதான் ஓய்வுபெற்ற நீதிபதி மோகன் கமிஷன். 

2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. தனது ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு முக்கியமான கைது நடவடிக்கையை கையில் எடுத்தது. மேம்பால கட்டியதில் முறைகேடு ஊழல் நடைப்பெற்றதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையர் முத்துக்கருப்பன் தலைமையில் நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதியை கைது செய்தனர்.  இந்தக் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் பேரணி நடைப்பெற்றது. சென்னையிலும் பேரணி நடைப்பெற்றது. பேரணியின் போது போலீசாருக்கும் பேரணி சென்றவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில்  கலவரம் மூண்டது. அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி பக்தவச்சலம் தலைமையில் விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த இடத்தில் இருந்தவர்கள் மன நலம் பாதித்தவர்கள் என்பதால் அப்போது சங்கிலியால் கட்டப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் 28 மன நோயாளிகள் உடல் கருகி இறந்து போனார்கள். இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராமதாஸ் தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது தமிழக அரசு.

கும்பகோணத்தில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004 ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. அத்தீ விபத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் சிக்கி கொண்டார்கள். கட்டடத்திலிருந்து வெளியே வர கூடிய வழியும் மிகவும் குறுகலாக இருந்ததாக சொல்லப்பட்டது. இதனால் ஒரே நேரத்தில் அனைத்து குழந்தைகளும் வெளியே வர முடியாத நிலையில் தீயில் சிக்கி 98 குழந்தைகள் உயிரிழந்தார்கள். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே சமயம் சம்பவத்தை தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பதி கமிஷன் விசாரனை மேற்கொண்டது. 

2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென அரசு கூறியது.  நிவாரணம் எம்ஜிஆர் நகரில் உள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. நிவாரணம் காலை 9 மணிக்கு தரப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில்  அதற்கு முன்னதாகவே வழங்கப்படுவதாக வதந்தி பரவியாதை அடுத்து மக்களின் கூட்டம் அதிகமானது.  அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தனர்.  இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற  நீதிபதி  ராமன் தலைமையயில் விசாரனை ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு.  

2008 ஆம் ஆண்டு தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும் லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை இயக்குநர் உபாத்யாவும் பேசிகொண்ட தொலைபேசி உரையாடல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  யார்  இதனை  வெளியிட்டார்கள், வெளியிட்டதன் நோக்கம் என்ன என்பது குறித்தெல்லாம் உளவுத்துறை டிஐஜி தலைமையில் விசாரனை மேற்கொள்ளப்பட்டது.  இது ஒரு புறமிருக்க மறுபுறம் ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.  

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இம்மானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அஞ்சலி செலுத்துவதற்காக வந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஜான் பாண்டியன்  கைது செய்யப்பட்டார். இதனால் அவருடைய ஆதவராளர்களுக்கும போலீசாருக்கும் இடையே  மோதல் போக்கு உருவானது.  அதனனை கட்டுக்குள் கொண்டு வர  காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.  மேலும் காயமடைந்தவர்களில்  2 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்ததையடுத்து  ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 

மேலே நாம் பார்த்தது போக தமிழகத்தில் இதுவரையில் எத்தனையோ  விசாரனை கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக இது போன்ற  ஆணையங்களை அமைக்கும்  போது ஓய்வு பெற்ற நீதிபதிகளோ அதிகாரிகளோ தான் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆணையத்தில் அதிகாரம்தான் என்ன, நோக்கமென்ன, ஏற்பட்ட பயன் என்ன என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் நம்மிடம் பேசும் போது “விசாரணை கமிஷனை பொருத்தவரையில் பதவியில் இருக்கும் நீதிபதிகளை நியமனம் செய்யலாம். ஆனால் எந்த அரசும் அப்படி நியமனம் செய்வதில்லை. காரணம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தான் தாங்கள் சொல்வதை கேட்பார்கள் என்பது அரசின் எண்ணம். விசாரனை கமிஷன்  தன் விசாரணைக்கு பிறகு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். அதை அரசு சட்டமன்றத்தில் வைக்கலாம் அல்லது கை வைக்காமலும் போகலாம். திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் திருடுபோனதற்கு கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை கமிஷனின்  பரிந்துரைகளை சட்டமன்றத்தில் வைக்கவில்லை. விசாரனை கமிஷன் என்பது ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு மறு பணி நியமனம்,அவ்வளவு தான். விசாரனை கமிஷனால் எந்தப் பயனும் இல்லை. கமிஷன் ஒருவரை குற்றிவாளி என்று தன் விசாரணையின் முடிவில் சொன்னால் கூட அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்றார். 

ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்களால் எந்தப் பலனுமே இல்லையென்றால் அதை அமைக்காமலேயே இருக்கலாமே என்ற கேள்வியுடன் வழக்கறிஞர் தமிழ் மணியிடம் கேட்ட போது  “ 20-30  ஆண்டுகள் முன்பு வரை பணியில் இருக்கும் நீதிபதிகளே விசாரணை ஆணையத்தை தலைமையேற்று நடத்திய வரலாறுகள் உண்டு. இந்திய அளவில் சில இடங்களில் 2002 வாக்கில் கூட சில பணியில் இருக்கும் நீதிபதிகள் விசாரணை ஆணையத்தை தலைமையேற்றதுண்டு. ஆனால் அவர்களது அறிக்கைகளை அரசு நிராகரிக்கும் நிலை வந்தவுடன் அதனை ஏன் தாங்கள் நடத்த வேண்டும் என்று அவர்கள் மறுக்க ஆரம்பித்தனர். அதாவது தங்களது நேரம், பணிக்காலம் என பலவற்றை சமாளித்துக் கொண்டு விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்தால் அதை ஏற்பதையும் நிராகரிப்பதையும் அரசே எடுத்தால், எதற்காக இதனை செய்ய வேண்டும் என அகில இந்திய நீதிபதிகள் கருத்தரங்கத்தில் பேசி மறுப்பது என முடிவெடுக்கப்பட்டது” என்றார். 

விசாரணை ஆணையம் என்பது குறிப்பிட்ட அந்தச் சம்பவத்திற்கு முற்றுபுள்ளி வைக்க அரசுக்கு உதவியாக இருக்கிறதே தவிர அதே போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி விடாமல் தடுப்பதற்கு வழியாகவில்லை என்பது தான் ஆணையம் குறித்த அனைவரின் கவலை. கண்துடைப்புக்காவோ பிரச்னையின் தீவிரத்தை குறைப்பதற்காகவோ அல்லாமல் அதிகாரமிக்க ஒரு அமைப்பாக செயல்பட்டால் தான் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை கிடைக்கும் உரிய தீர்வையும் பெற முடியும் என்பதில் மாற்று கருத்தில்லை. . 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com