கட் அடிக்கும் எம்.எல்.ஏ.க்கள்: காலியாக இருக்கும் சட்டசபை இருக்கைகள்
அரசியல் கூட்டங்களைப் போல், கர்நாடக மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின் போது பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் இருக்கைகள் காலியாக இருந்தன.
அரசியல் கூட்டங்களில் நாற்காலிகள் காலியாக இருப்பது சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் மக்களும், தொண்டர்களும் இல்லாமல் நடைபெறும் கூட்டங்களை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். சில முக்கிய கட்சிகளே இந்த விவகாரங்களில் சிக்குகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் குறைந்த அளவிலேயே கலந்து கொண்டதால் இருக்கைகள் காலியாக உள்ளன. கடந்த நவம்பர் 13-ம் தேதி தொடங்கி இந்த கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 24-ம் தேதி உடன் கூட்டத் தொடர் முடிவடைகிறது.
குறைவான உறுப்பினர்கள் கலந்து கொண்டதற்கு எதிர்க்கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ. ராகவேந்திரா கூறுகையில், குறைவான வருகைப் பதிவே இருக்கிறது. இது சரியானது அல்ல. நாங்கள் முக்கியமான விஷயத்தை விவாதிக்க வேண்டியிருக்கிறது என்றார்.