ELIMINATOR ஆட்டம்: செம ஃபார்மில் ஹைதராபாத்... அதிரடி காட்டுமா பெங்களூரு?

ELIMINATOR ஆட்டம்: செம ஃபார்மில் ஹைதராபாத்... அதிரடி காட்டுமா பெங்களூரு?
ELIMINATOR ஆட்டம்:  செம ஃபார்மில் ஹைதராபாத்... அதிரடி காட்டுமா பெங்களூரு?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர்  போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ‌‌‌‌ மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அபுதாபியில் ‌நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் லீக் சுற்றில் விளையாடிய 14 போட்டிகளில் தலா 7 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.

இவ்விரு அணிகளும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஹைதராபாத் அணி 9 போட்டிகளிலும், பெங்களூரு அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை‌

ELIMINATOR போட்டியில் மோதவுள்ள ஹை தராபாத் மற்றும் பெங்களூரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து பார்க்கலாம்.

வென்றால் மட்டுமே பிளே ஆஃப்க்குள் நுழைய முடியும் என்ற அழுத்தத்தில் மும்பை அணியை பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய உத்வேகத்தில் உள்ளது ஹைதராபாத் அணி. பேட்டிங்கில் மேல்வரிசை வீரர்களான வார்னர், சாஹா, வில்லியம்சன் மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோர் பெரும் பலமாக பார்க்கப்படுகின்றனர். ஆல்ரவுண்டர் ஹோல்டர் மெச்சத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது மத்திய கள பேட்டிங்கிற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

இளம் வீரர்கள் பிரியம் கார்க், அப்துல் சமத் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரும் பேட்டிங்கில் ஆறுதல் அளிக்கின்றனர். எளிதில் கணிக்க முடியாத தனது மாயாஜால சுழல் பந்துகளில் எதிரணியினரை திணறடித்து வருகிறார் ரஷீத் கான். நடராஜனின் துல்லிய யார்க்கர்களும், சந்தீப் சர்மாவின் பவர் பிளே ஸ்விங்குகளும், ஹோல்டரின் பவுன்சர்களும் பந்துவீச்சில் அசுரபலம். சுழற்பந்து வீச்சாளர் சபாஸ் நதீமும் அணிக்கு பக்கபலமாகவே பார்க்கப்படுகிறார். நடராஜன் அவ்வப்போது FULL TOSS களை எறிவது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

3 ஆண்டுகளுக்குப் பிறகு பிளே ஆஃப்க்குள் நுழைந்துள்ளது பெங்களூரு அணி. சீசனின் முதல் பாதியை சிறப்பாகக் கடந்த அந்த அணி சீசனின் இரண்டாம் பாதியில் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளது. பேட்டிங்கில் தொடக்க வீரர் படிக்கலும், கேப்டன் கோலியும் சராசரியான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இருப்பினும் அதிரடியான விளாசல்கள் மூலம் பெரிய ஸ்கோரை எட்டுவதில் இருவரும் சற்றே திணறுகின்றனர்.

நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸின் அதிரடிகள் அணிக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கின்றன. ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் பக்கபலமாக பார்க்கப்படுகிறார். ஆனால் மற்றொரு ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் மோசமான ஃபார்மை இழந்துள்ளது பெரும் பலவீனம். வேகப்பந்து வீச்சாளர்கள் சைனியும், சிராஜும் ஓரளவு ஆறுதல் மட்டுமே. சுழல் சூத்திரதாரியான சாஹல் MIDDLE OVER களில் விக்கெட்டைச் சரிக்கும் துருப்புச் சீட்டாக கைகொடுக்கிறார்.

உச்சகட்ட கள அழுத்தமிருக்கும் இந்த நாக் அவுட் போட்டியில் வித்தியாசமான வியூகங்களை வகுக்கும் அணிக்கே வெற்றி வசப்படும் என்பதால் அனல்பறக்கும் அதிரடிகள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com