மக்களவை தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் வாகனச் சோதனையின் போது, ஒரே நாளில் 35 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வால்டாக்ஸ் சாலையில் நடத்தப்பட்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட 6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் பூக்கடை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பல்லாவரம் அருகே நடத்தப்பட்ட வாகன தணிக்கையில், 27 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதேப்போல ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட வங்கி பணம் 91 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் வங்கியில் இருந்து, 91லட்ச ரூபாய் பணத்தை ஈரோடு மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலத்தில் ஏ.டி.எம் மையங்களுக்கு கொண்டு சென்ற ஒரு கோடியே 68 லட்சத்து 5௦ ஆயிரம் ரூபாய் தொகையை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததாலும், பணத்தை கொண்டு செல்ல துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இல்லை என்தாலும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
கடலூரில் பேருந்தில் கேட்பாரற்று கிடந்த 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். புதுவையில் இருந்து சேலம் சென்ற பேருந்தை ஆல்ப்பேட்டை சோதனைச்சாவடியில் காவல்துறையினர் சோதனை செய்த போது பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

