“தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை” - மாவட்ட தேர்தல் அலுவலர்
ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ஆம் தேதி முதல் தொடங்கி 26 ஆம் தேதி மாலை 3 மணி வரை நடைபெற்றது. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில் 27ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தனியார் பள்ளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது, ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் அன்று சென்னையில் தனியார் பள்ளிகள் இயங்கினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குப்பதிவு அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு நாளன்று அனைத்து நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

