துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது தேர்தல் செலவின அலுவலர் புகார்
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது தேர்தல் செலவின உதவி அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். மேலும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்திற்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் அவரது பண்ணை வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அந்தச் சோதனையில் ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இதனைத்தொடர்ந்து துரைமுருகனின் நண்பரும், திமுகவின் பகுதிச் செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்தனர். மேலும், வேலூரில் உள்ள சிமென்ட் குடோனில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வேலூரில் போட்டியிடும் கதிர் ஆனந்த தாக்கல் செய்த மனுவில், குறிப்பிடப்பட்டுள்ளதை காட்டிலும் அதிக அளவு பணம் வருமான வரித்துறையினரால் பிடிபட்டு இருப்பதால் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி காட்பாடி காவல் நிலையத்தில் தேர்தல் செலவின உதவி அலுவலர் புகார் அளித்துள்ளார். இதனிடையே வேலூரில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.