பழனி பஞ்சாமிர்த டப்பாக்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்
பழனி முருகன் கோயில் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்த டப்பாக்களில் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 17 வது மக்களவையைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் ஏப்ரல் 11 ஆம் தேதியிலிருந்து 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்த டப்பாக்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் டப்பாக்களில் அடைத்த பஞ்சாமிர்தத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பஞ்சாமிர்த டப்பாக்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் மத்தியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புனர்வு ஏற்படுத்தப்படும் எனப் பழனி தேர்தல் அதிகாரியும் சார் ஆட்சியருமான அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.