தேர்தல் கெடுபிடி: சீர்காழியில் திருமணத்திற்கு சென்றவர்களிடம் இருந்து 30 சவரன் நகை பறிமுதல்
சீர்காழி அருகே திருமணத்திற்கு சென்று திரும்பிய குடும்பத்தினரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த நகைப்பெட்டியில் 30 சவரன் நகை இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியசகாயம் என்றும் குடும்பத்தினருடன் சென்னையில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டு மயிலாடுதுறை திரும்புவதாகவும் குடும்பத்தினர் அணிந்திருந்த நகைகளை பாதுகாப்பாக கழட்டி நகை பெட்டியில் வைத்திருந்ததாகவும் கூறினார்.
ஆனால் அதிகாரிகளோ நகைக்கான உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி 30 சவரன் நகையையும் பறிமுதல் செய்ததால் ஆரோக்கியசகாயம் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அதனை பொருட்படுத்தாத அதிகாரிகள் நகைகளை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.