அஞ்சாங்கல் ஆட்டம் ஆடி பேத்தியை உற்சாகப்படுத்திய பாட்டி - வைரல் வீடியோ
குழந்தைகள் ஏன் தங்கள் தாத்தா பாட்டிகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
குழந்தைப் பருவத்தின் சிறந்த பகுதி என்பது தங்கள் தாத்தா பாட்டிகளுடன் நேரத்தைச் செலவிடுவதையே பலரும் கூறுவார்கள். அதை நினைவு படுத்தும் வகையில் தற்போது மேலும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ராஜ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு வயதான பெண்மணி தனது பேத்தியுடன் விளையாடும் இரண்டு நிமிட வீடியோவை- பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
அந்த வீடியோவில் அந்தப் பெண்மணி 5 சிறிய கற்களை வைத்து விளையாடுகிறார். அதை அவருடைய பேத்தி பார்த்து மிகவும் ரசித்து மகிழ்கிறாள். அவள் பாட்டி கற்களால் பல்வேறு தந்திரங்களைக் காட்டியதால் அவள் சிரிக்கிறாள். குழந்தைகள் ஏன் தங்கள் தாத்தா பாட்டிகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என்ற வாசகத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
கருத்துகள் பிரிவில், நெட்டிசன்கள் உணர்ச்சிகரமான வரிகளை வெளியிட்டுள்ளனர். “அருமை. நான் அதை என் பாட்டியுடன் விளையாடி உள்ளேன். பகிர்வுக்கு நன்றி. என் மகனுடன் மீண்டும் விளையாட எனக்கு இது நினைவூட்டியுள்ளது” என ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், “தயவுசெய்து தாத்தா பாட்டிகளைக் கவனித்துக்கொள்ளுங்கள். அவர்கள் நமக்குக் கிடைத்த மிக அழகான பரிசு. நான் என் பாட்டியை இழந்தேன். அவர்களின் மதிப்பு எனக்குத் தெரியும். அவர்கள் உண்மையான வைரங்கள், ரத்தினக் கற்கள். அனைத்து தாத்தா பாட்டிகளுக்கும் சல்யூட்.” எனத் தெரிவித்துள்ளார்.