எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் - ஜவாஹிருல்லா
அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதற்கு தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் அனிதா 12 ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்களையும், கட்-ஆஃப் மதிப்பெண்ணாக 196.5 பெற்றார். மருத்துவம் பயில இரவும் பகலும் படித்து அதிக மதிப்பெண்களைப் பெற்ற அனிதா நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றார் என்பதால் மருத்துவக் கல்வி பயிலமுடியாமல் மனவேதனை அடைந்து இன்று தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதா, விபரீத முடிவை எடுத்து தனது வாழ்வை முடித்துக்கொண்டுள்ளது வேதனைக்குரியது” என்று கூறினார்.
மேலும், “சமூக நீதியையும், ஏழை எளிய கிராமப்புற மாணவர்களையும் பாதிக்கும் நீட் தேர்வுக்கு விலக்குபெற திராணியற்ற எடப்பாடி தலைமையிலான மாநில அரசும், விலக்கு அளிப்போம் என்று ஏமாற்றி வந்த மத்திய அரசும் இந்த தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த சோக சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது. மாணவி அனிதாவின் மரணம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசு உடனே நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க வேண்டுமென கோருகிறேன். மரணமடைந்த மாணவி அனிதாவின் குடும்பத்தில் ஒருவருக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் அனிதாவின் குடும்பத்தினருக்கு கணிசமாக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.