முதல்வர் வேட்பாளரின் தொகுதி அந்தஸ்தில் எடப்பாடி: ஹாட்ரிக் அடிப்பாரா பழனிசாமி?

முதல்வர் வேட்பாளரின் தொகுதி அந்தஸ்தில் எடப்பாடி: ஹாட்ரிக் அடிப்பாரா பழனிசாமி?
முதல்வர் வேட்பாளரின் தொகுதி அந்தஸ்தில் எடப்பாடி: ஹாட்ரிக் அடிப்பாரா பழனிசாமி?

முதல்வர் வேட்பாளர் போட்டியிடும் தொகுதி என்ற நட்சத்திர அந்தஸ்தை முதல்முறையாகப் பெற்றிருக்கிறது எடப்பாடி. தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி 4 முறை வெற்றியை ருசித்திருக்கும் தொகுதி எடப்பாடி.

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி தொகுதி விவசாயிகளையும் நெசவாளர்களையும் அதிகம் கொண்டிருக்கிறது. எடப்பாடி தாலுகாவையும், மேட்டூர் தாலுகாவின் சில பகுதிகளையும் கொண்டுள்ளது எடப்பாடி. எடப்பாடி நகராட்சியையும், நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம் பேரூராட்சிகளையும், வீரக்கல், குட்டப்பட்டி, சின்னசோரகை, பெரியசோரகை, கரிக்காபட்டி, தோரமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளையும் எடப்பாடி தொகுதி உள்ளடக்கியுள்ளது.

எடப்பாடியில் இதுவரை நடந்த 13 தேர்தல்களில் அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 3 முறையும், காங்கிரஸ் - திமுக ஆகிய கட்சியில் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தற்போதைய தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி, திமுக சார்பில் சம்பத்குமார், அமமுக சார்பில் பூக்கடை சேகர், மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா ஆகியோர் எடப்பாடி தொகுதியின் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

அதிமுக வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி, இந்தத் தொகுதியில் இதுவரை 6 தேர்தல்களில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றுள்ளார். 1989 ஆம் ஆண்டு அதிமுக இரண்டாக உடைந்தபோது ஜெயலலிதா அணியின் சார்பில் சேவல் சின்னத்தில் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991, 2011, 2016 ஆகிய தேர்தல்களிலும் வெற்றியை ருசித்த எடப்பாடி பழனிசாமி, 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டின் தேர்தல்களில் தோல்வியைத் தழுவினார்.

2011 தேர்தலில் வெற்றி பெற்றபோது முதல்முறையாக ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் கிடைத்தது. 2016 ஆம் ஆண்டு பெற்ற வெற்றியில் பொதுப்பணித்துறை அமைச்சரான எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் முதலமைச்சரானார். தற்போது ஆறாவது முறையாக அவர் போட்டியிடும் எடப்பாடி தொகுதி, முதல்வர் வேட்பாளரின் தொகுதி என்ற அந்தஸ்தை முதல்முறையாகப் பெற்று கவனம் ஈர்த்துள்ளது.

கடந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் பாமக வேட்பாளர் அண்ணாதுரைதயும், மூன்றாம் இடத்தில் திமுக வேட்பாளர் முருகேசனும் இருந்தனர்.

முதல்வர் வேட்பாளரை எதிர்த்து திமுகவின் சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். எடப்பாடி தொகுதியில் உள்ள கொங்கணாபுரம் - அத்தப்பனூரைச் சேர்ந்த சம்பத்குமார், பாரம்பரியமாக தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர். எம்சிஏ பட்டதாரியான இவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கொரோனா காலத்தில் தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். திமுகவின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வகணபதியின் ஆதரவாளர்.

அமமுக சார்பில் சேகர் என்கிற பூக்கடை சேகர் போட்டியிடுகிறார். எடப்பாடி நகராட்சியில் அதிமுக கவுன்சிலராக இருந்த பூக்கடை சேகர், எடப்பாடியில் பெரிய அளவில் பூ வியாபாரம் செய்து வருவதால் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். தற்போது அமமுகவின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர், எடப்பாடி நகரச் செயலாளர் பொறுப்புகளை வகிக்கிறார்.

எடப்பாடியின் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் தாசப்பராஜ். சேலத்தில் உணவுப் பொருட்களின் முக்கியச் சந்தையான லீ பஜாரைச் சேர்ந்த இவர், தொழில் ரீதியாக பகுதியில் அறிமுகம் ஆனவர். நாம் தமிழர் கட்சியின் எடப்பாடி தொகுதி வேட்பாளர் ஸ்ரீ ரத்னா. கட்சியின் செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கி வருபவர் என்ற அடிப்படையில் வேட்பாளர் ஆகியுள்ளா ஸ்ரீரத்னா.

ஐந்து முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் எடப்பாடியில் களம் காண்கின்றனர். தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி ஹாட்ரிக் அடிக்க ஆளுங்கட்சியினர் உழைத்து வருகின்றனர். ஆளுங்கட்சியின் குறைகளைச் சொல்லி எதிர்க்கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com