எடப்பாடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? - தொகுதி கடந்து வந்த பாதை!

எடப்பாடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? - தொகுதி கடந்து வந்த பாதை!
எடப்பாடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? - தொகுதி கடந்து வந்த பாதை!

திமுகவிற்கு எட்டாக்கனியாக இருக்கும் எடப்பாடி தொகுதி கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொண்ட விதத்தை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக முதற்கட்டமாக 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 5-ஆம் தேதி வெளியிட்டது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 6 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றன.

அதனைத்தொடர்ந்து நேற்று 171 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி களம் காண உள்ள நிலையில், அந்தத் தொகுதி கடந்த சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொண்ட விதத்தை இதில் தெரிந்துகொள்வோம்.

1951 ஆண்டு தொடங்கி 2016 வரை நடந்த சட்டமன்ற தேர்தல்களில், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட  காங்கிரஸ் மற்றும் திமுக தலா 2 முறையும் பாமக 3 முறையும் வெற்றிபெற்றன. அதிகபட்சமாக ஆறுமுறை அதிமுக எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்றது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நான்கு முறை எடப்பாடித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1989 ஆம்ஆண்டு அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாகப் பிரிந்தபோது ஜெயலலிதா அணியின் சார்பில் சேவல் சின்னத்தில்  போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக எடப்பாடி தொகுதியில் நேரடியாக களம் கண்டது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் முருகேசன் 24.65 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமகவின் வேட்பாளர் அண்ணாதுரை 25.33 சதவிகித வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி, தற்போது மீண்டும் அதே தொகுதியில் முதலமைச்சர் வேட்பாளராக களம் காண்கிறார்.

எடப்பாடி தொகுதியில் அதிமுகவுக்கு அடுத்தபடியாக வாக்கு வங்கியை கொண்டுள்ள பாமகவும் தற்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. ஆகவே திமுக யாரை களமிறக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமூக ரீதியான வாக்குகளைப் பெறும்படியான வேட்பாளரை திமுக களம் இறக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் திமுகவிற்கு எட்டாக்கனியாக இருக்கும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி தொடருமா அல்லது வெற்றிக் கனியை திமுக பறிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com