ஓரிரு நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு ?
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 3ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதனால் அதற்கு முன்பு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்காக தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்களை நடத்திவந்தது. அத்துடன் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனையையும் நடத்தி வந்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் தகவல் தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான கடைசி கட்ட ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் இம்முறை தேர்தலை 7 அல்லது 8 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சட்டமன்ற தேர்தல்களும் சேர்த்து நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் குடியரசு தலைவர் ஆட்சியுள்ளதால் அங்கும் தேர்தல் சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆனால் காஷ்மீர் நிலவும் பதட்டமான சூழலால் சட்டமன்ற தேர்தல் நடத்துவது கடினமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.