“விவிபேட் மூலம் தேர்தலில் வெளிப்படைத்தன்மை தேவை” - சந்திரபாபு நாயுடு

“விவிபேட் மூலம் தேர்தலில் வெளிப்படைத்தன்மை தேவை” - சந்திரபாபு நாயுடு
“விவிபேட் மூலம் தேர்தலில் வெளிப்படைத்தன்மை தேவை” - சந்திரபாபு நாயுடு

வாக்கு ஒப்புகைச் சீட்டு மற்றும் வாக்குப்பதிவு இயந்திரந்த முடிவில் ஏதாவது ஒரு இடத்தில் சரியாக இல்லை என்றால் தேர்தல் ஆணையம் அனைத்து வாக்கு ஒப்புகைச் சீட்டையும் எண்ணவேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

வாக்கு ஒப்புகைச் சீட்டு முறையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபார்ப்பதை அதிகரிக்கவேண்டும் என்று எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். அந்த வழக்கில் உச்சநீதிமன்றம்,“தேர்தல் ஆணையம் ஒரு தொகுதிக்கு 5 வாக்குப்பதிவு இயந்திரங்களின் முடிவை விவிபேட் மூலம் சரிபார்க்க வேண்டும்” என உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் ஏற்கெனவே அவர்கள் தாக்கல் செய்தது போல,  50% தொகுதிகளில் வாக்கு ஒப்புகைச் சீட்டு முறை மூலம் வாக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். அதில், “எங்கள் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனினும் நாங்கள் மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் முறையிடவுள்ளோம். அதன்படி தற்போது சரிபார்க்கப்படும் ஐந்து இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் முடிவு சரியாக இல்லை என்றால் அந்தத் தொகுதியிலுள்ள அனைத்து வாக்கு ஒப்புகைச் சீட்டையும் எண்ணவேண்டும் என வலியுறுத்த உள்ளோம். எங்களது ஒரே நோக்கம் தேர்தல் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்பதேயாகும். ஏனென்றால் 9 ஆயிரம் கோடி ரூபாய் விவிபேட் இயந்திரத்திற்கு செலவு செய்யும் போது அதை எண்ணி பார்த்து தேர்தலில் ஏன் வெளிப்படை தன்மையை கொண்டு வரக்கூடாது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com