”பாஜகவை அகற்றுவதே குறிக்கோள்” - துரைமுருகன்

”பாஜகவை அகற்றுவதே குறிக்கோள்” - துரைமுருகன்

”பாஜகவை அகற்றுவதே குறிக்கோள்” - துரைமுருகன்
Published on

பாரதிய ஜனதா கட்சியை அகற்றவே தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி குறித்து பேசிவருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெ‌ரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் எதிர்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

இதற்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் இறங்கியுள்ளார். இதையடுத்து டெல்லி சென்றுள்ள ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

டிசம்பர் 16ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும் சோனியாவிடம் ஸ்டாலின் வழங்கினார்.

சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியுடனான சந்திப்பின் போது மேகதாது அணை குறித்து ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பதால் மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து சோனியா மற்றும் ராகுல்காந்தியிடம் ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் நாளை டெல்லியில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும்
ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், “கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது ஓடோடிச் சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி, உடனடியாக கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியை அறிவித்தார். ஆனால் தமிழகத்தில் கஜா புயலால் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் எதுவுமே பேசாமல் உள்ளார். மதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது ஆயிரம் யானைகளுக்கு சமம் என வைகோ கூறியது அவருடைய பலத்தை உணர்ந்து கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com