திமுக வாக்குகளை பணம் சாப்பிட்டுவிட்டது: துரைமுருகன்
திமுகவினரின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. இதில் சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இதுவரை 12 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12 சுற்றிலும் டிடிவி தினகரனே முன்னிலை வகித்து வருகிறார்.
12வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 60286 வாக்குகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 27,937 வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் உள்ளார். திமுக வேட்பாளர் 14,481 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2607 வாக்குகளுடன் 4வது இடத்தில் உள்ளார். பாஜக 760 வாக்குகளை பெற்றுள்ளது. தொடர்ந்து நோட்டாவை விட குறைந்த வாக்குகளையே பாஜக பெற்று வருகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ஆர்.கே நகரில் திமுகவினரின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டு விட்டது என தெரிவித்தார். அத்துடன் ஆர்.கே.நகர் தேர்தலில் ஜனநாயகம் வெல்லவில்லை என்றும், பணநாயகம்தான் வென்றது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.