“கூடை கூடையாய் பணம் அள்ளிப் போகலாம் என வந்தார்கள்.. ஏமாற்றமே மிஞ்சியது” - துரைமுருகன்

“கூடை கூடையாய் பணம் அள்ளிப் போகலாம் என வந்தார்கள்.. ஏமாற்றமே மிஞ்சியது” - துரைமுருகன்
 “கூடை கூடையாய் பணம் அள்ளிப் போகலாம் என வந்தார்கள்.. ஏமாற்றமே மிஞ்சியது” - துரைமுருகன்

நீண்ட நேரம் நடத்தப்பட்ட சோதனையில், வருமான வரித்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி - காந்திநகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டுக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்துவதற்காக வந்தனர். அப்போது அங்கிருந்த திமுக தொண்டர்கள், சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு, துரைமுருகனின் வீட்டில் சோதனை தொடங்கியது. அங்கிருந்த துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 

இதேபோல, காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும், பள்ளியிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த, இந்த சோதனை நிறைவடைந்துள்ளது.

சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொறுளாளர் துரைமுருகன், “வருமானவரித்துறையினர் வீடு கல்லூரி என கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு எங்கேயாவது தவறு இருக்கிறதா என்று தேடி தேடி பார்த்தார்கள். இன்று காலை 8 மணியில் இருந்து இதுவரை இந்த கல்லூரியை அலசி எடுத்துவிட்டார்கள். எம்.டி அறை முதல் எல்.கே.ஜி படிக்கிற பிள்ளைகளின் வகுப்பறை வரையில் சல்லடை போட்டு சலித்துவிட்டார்கள். 

விடுதியில் இருக்கும் பிள்ளைகளின் கப்போர்டுகள் உடைக்கப்பட்டது. சுமார் 12 மணிநேரம் 40 பேர் இந்த கல்லூரியை மாறி மாறி சோதனை செய்தனர். கடைசியில் கணக்கு வழக்குகள் சரியாக இருக்கிறது. எதுவும் சட்டத்தை மீறி இல்லை. எனவே நாங்கள் எந்த பொருட்களையும் எடுக்கவில்லை என எழுதி கொடுத்துவிட்டு போய்விட்டார்கள். 

ஆனால் அவர்களுடைய நோக்கம் இங்கு தவறு இருக்கும் என்று வரவில்லை. அவர்கள் ஏவப்பட்டவர்கள். எங்கள் தேர்தல் பணியை முடக்க வேண்டும். மெண்டல் டார்ச்சர் தர வேண்டும். சுலபமாக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நினைத்துள்ளனர். ஒரு கழகத்தின் பொருளாளர், சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்றத்திலே உட்காந்திருக்கிறவர், 70 என்பதை எட்டி பிடிக்கிற வயது. இதையெல்லாம் பாராமல், ‘கோடி கோடியாய் சேர்த்து வைத்திருப்போம். கூடை கூடையாய் வந்து அள்ளிகொண்டு போகலாம்’ என்று பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அதிகாரிகள் மீது நான் குறை கூற வில்லை. அவர்கள் பணிகள் அவர்கள் செய்தார்கள். ஆனால் மோடி அரசும் எடப்பாடி அரசும் கைகோர்த்து இப்படிபட்ட ஏவலை செய்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com