40 ஆண்டுகளாக கழுதைகள் மூலம் எடுத்துச் செல்லப்படும் வாக்கு இயந்திரம் !
தருமபுரி அருகே குடிமக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களுக்கு கழுதைகள் மூலமே வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
மக்களவைத் தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவை மையமாக வைத்து தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களுக்கு குதிரைகள் மற்றும் கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டுவனஹள்ளி ஊராட்சியில் கோட்டூர், ஏரிமலை அலக்கட்டு என மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அடர்ந்த மலை வனப்பகுதியில் யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழும் பகுதியை கடந்து மலை மீது இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மலை கிராமங்களுக்கு செல்ல வேண்டுமானால் 14 கி.மீ தூரம் வரை செங்குத்தாக மலை மீது ஏற வேண்டும். சாலை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத இந்த கிராம மக்களுக்கு, ஜனநாயகக் கடமையை ஆற்ற கழுதைகள் மூலமே வாக்கு இயந்திரங்கள் எடுத்து செல்லப்படுகிறது.அனைத்து பொருட்களையும் கழுதைகள் மூலமே எடுத்து செல்லும் இந்த மக்களுக்காகவே, மலை அடிவாரத்தில் கரகூரை சேர்ந்த சின்ராஜ் என்பவர் கழுதைகளை வளர்த்து வருகிறார்.
கழுதைகள் மூலம் மலை கிராம மக்கள் வாங்கி வரும் பொருட்களை எடுத்து சென்று கொடுத்து வரும் சின்ராஜ், அதற்காக 150 ரூபாயை மட்டுமே வாடகையாக வசூலிக்கின்றார். தற்போது மலைக் கிராம மக்கள் வாக்களிப்பதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, சின்ராஜின் அந்த 5 கழுதைகளே சுமந்து செல்கின்றன. மேலும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்களை கீழே எடுத்து வரும் பணியும் கழுதைகளை நம்பியே உள்ளது.
இவ்வாறு தேர்தல் வரும் நேரங்களில், இந்த மலைவாழ் மக்களுக்காக தனியாக ஒரு தேர்தல் அலுவலரை நியமித்து, கழுதைகள் பத்திரமாக வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்கின்றனவா என்பதை கண்காணித்து வருகின்றனர். சுமார் 40 ஆண்டுகளாக இந்தப் பணியை செய்துவரும் சின்ராஜ்க்கு கூலியாக 2000 முதல் 3000 ரூபாய் வரை அரசு வழங்குகிறது.
இந்த கழுதைகள் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து சின்ராஜ் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். எந்த ஒரு அடிப்படை வசதிகளுமே இல்லாத இந்த மலை கிராமத்தினருக்கு, சின்ராஜ் இல்லையென்றால் பயணம் என்பது கானல் நீராகவே இருக்கும் என்பது தாம் நிசர்சனமான உண்மை.