டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எழுச்சி பெறுமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்?

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எழுச்சி பெறுமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்?
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எழுச்சி பெறுமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்?

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து களம் காணவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பலம் பலவீனம் குறித்து பார்க்கலாம். பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் சீசனில் ஐந்து போட்டிகளில் விளையாடி உள்ளது. 

அடுத்தடுத்த நான்கு வெற்றிகளின் மூலம் நடப்பு சீசனின் நட்சத்திர அணியாக வலம் வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கண்ட தோல்வியின் மூலம் சிறு சறுக்கலைச் சந்தித்துள்ளது. அணியின் முன்வரிசை பேட்டிங்கில் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் அசுரபலமாக பார்க்கப்படுகிறார். கேப்டன் கோலி நிலையான ஃபார்மை வெளிப்படுத்த தவறி வருவது ஆர்சிபியை ஆட்டம் காண வைக்கிறது.

அணியின் முக்கிய துருப்புச் சீட்டுகளாக பார்க்கப்படும் டிவில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் சிறு பின்னடவைச் சந்தித்துள்ளனர். இருப்பினும் அவர்களது அனுபவம் பெங்களூரு அணிக்கு பெரும் பலமாகவே பார்க்கப்படுகிறது. மத்திய வரிசையில் அதிரடி விளாசல்களை வெளிப்படுத்த வலுவான வீரர் ஒருவர் இல்லாதது ஆர்சிபி அணியில் பெரும் குறையாக உள்ளது. வாஷிங்டன் சுந்தர் அதிரடியை வெளிப்படுத்த தவறி வருவது பின்னடைவே. ஆல்ரவுண்டர் டேன் கிறிஸ்டியன் பந்து வீச்சில் ஆறுதலாக இருந்தாலும் பேட்டிங்கில் பெரிதளவில் சோபிக்கவில்லை. ஜேமிசன் பேட்டிங்கில் பக்கபலமாக உள்ளார்.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் நடப்பு சீசனின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக வலம் வரும் ஹர்ஷல் படேல், சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் தடுமாறியுள்ளது அவர் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளது. முகமது சிராஜ் முதிர்ச்சியான பந்து வீச்சை வெளிப்படுத்துவது பலம். கைல் ஜேமிசனின் பவுலிங் பங்களிப்பு பவர் பிளேவில் கூடுதல் பலம். சுழற்பந்து வீச்சாளர் சாஹல் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ரன்களை அதிகளவில் விட்டுக் கொடுப்பது பின்னடைவே. அதே சமயம் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை எனினும் ரன்களை கட்டுப்படுத்தி அணிக்கு வலு சேர்க்கிறார் வாஷிங்டன் சுந்தர்.

அகமதாபாத் மைதானம் சுழற்பந்து வீச்சிற்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் சபாஸ் அகமது மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என தெரிகிறது. சென்னைக்கு எதிரான போட்டியில் கண்ட தோல்வி மோசமானது என்பதால் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ்.

நன்றி : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com