”பேஸ்புக், ட்விட்டரில் கேலி கிண்டல் கூடாது” : தேமுதிகவினருக்கு கேப்டன் அட்வைஸ்
சமூக வலைதளங்களில் கட்சியினர் தனிப்பட்ட விமர்சனங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என தேமுதிகவினருக்கு அக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில், தேமுதிக கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் கட்சியை பற்றியோ, தனிப்பட்ட நபர் பற்றியோ, விமர்சனங்கள் மற்றும் கேலி கிண்டல் செய்வதை கழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இதனை மீறி கருத்துக்களை பதிவிடுபவர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவர் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அதே போல் இணையதளத்தில் தேமுதிக கட்சிக்கென தனியாக அதிகாரப்பூர்வ முகவரி இருக்கும்போது, தனித்தனியாக பேஸ்புக்கில் பிரிந்து செயல்படுவதையும் தமது கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.