இந்த சந்திப்புக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்: சரத்குமார்
திமுக தலைவர் கருணாநிதி உடனான சந்திப்புக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
சரத்குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதியை சந்தித்த போது எடுத்த படத்தை பதிவிட்டுள்ளார். கோபாலபுரம் இல்லத்தில் ராதிகா, சரத்குமார் இருவரும் கருணாநிதியை சந்திப்பது போன்று அந்தப் படம் உள்ளது. அந்தப் படத்துடன் சில கருத்துக்களையும் சரத்குமார் கூறியுள்ளார்.
அதில், “அரசியலுக்கு வந்த பிறகு எந்த ஒரு செயலை செய்தாலும் அரசியல் சாயம் பூசப்படும் சூழல்தான் நமது நாட்டில் நிலவுகிறது. இரண்டு வாரம் முன்னர் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான இந்தச் சந்திப்பிற்கு தயது செய்து அதே சாயம் பூச வேண்டாம். தற்போது இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால் இதனை பதிவு செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென சந்தித்தது தமிழகம் மற்றும் தேசிய அரசியலில் மிகப்பெரிய விவாதப் பொருளானது. இந்த சந்திப்புக்கு பிறகு பலரும் கருணாநிதியை சென்று பார்த்து வருகின்றனர்.