பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த திமுக பொதுக்குழுவில் தீர்மானம்
பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்திட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், இந்திய அரசியல் சட்டத்தின் 70 ஆம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு எண்ணிக்கையின் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறையை கொண்டுவர சட்டத்திருத்தம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில், பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினர் என புதிதாக வரையறையை மத்திய அரசு ஏற்படுத்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது என்பது உள்ளிட்ட மொத்தம் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.