“சபாநாயகர் பக்கத்தில் போய் சொன்னாலும், மாஃபா பேசியதுதான் சரின்னு சொல்கிறார்” - துரைமுருகன்

“சபாநாயகர் பக்கத்தில் போய் சொன்னாலும், மாஃபா பேசியதுதான் சரின்னு சொல்கிறார்” - துரைமுருகன்
“சபாநாயகர் பக்கத்தில் போய் சொன்னாலும், மாஃபா பேசியதுதான் சரின்னு சொல்கிறார்” - துரைமுருகன்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சாத்தியம் என அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியதில் அவை உரிமை மீறல் இல்லை என சபாநாயகர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது.

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பேரவையில் இன்று பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “இலங்கை தமிழகர்களுக்கு இரட்டை குடியுரிமை என்ற அதிமுக நிலைப்பாடு என்றும் சரியானதுதான். இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பல ஆண்டுகளாக இரட்டை குடியுரிமை பற்றி வலியுறுத்தி வந்தார். இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமையே இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் தமிழக அரசின் நிலைப்பாட்டை பாராட்டியுள்ளார். எங்களது நிலைப்பாட்டில் தவறில்லை” எனப் பேசினார்.

இதையடுத்து இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை தொடர்பாக அமைச்சர் பாண்டியராஜன் பேசியது குறித்து உரிமை மீறல் பிரச்னையை கொண்டுவந்தார் திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு. அவர் பேசுகையில், “இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியும், அது சாத்தியம்தான் என்று அமைச்சர் பாண்டியராஜன் பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சராலேயே அது மறுக்கப்பட்டுவிட்டது. சட்டபேரவையில் தவறான தகவலை அளித்து அவையை தவறாக வழிநடத்தியுள்ளார். அமைச்சர் பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என்று கேட்கவில்லை, ஆனால் இதுபோன்று பேசியதால் அவர்களுக்குள் பிரச்னை உருவாக வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சாத்தியம் என பாண்டியராஜன் பேசியதில் அவை உரிமை மீறல் இல்லை என சபாநாயகர் தனபால் தீர்ப்பளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன், “குடியுரிமை பிரச்னை என்பது மத்திய அரசு சம்பந்தப்பட்டது. மத்திய அமைச்சரால் முடியாது என்று சொன்ன விஷயத்தை தமிழக அமைச்சர் முடியும் என்று சொல்கிறார். இது அவை உரிமை மீறல். இதை சபாநாயகரிடம் சொன்னால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சபாநாயகர் பக்கத்தில் போய் சொன்னாலும், மாஃபா பாண்டியராஜன் பேசியது சரிதான் என சொல்கிறார்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com