“வருமான வரித்துறையினர் வீண்பழி சுமத்துகின்றனர்” - துரைமுருகன் குற்றச்சாட்டு

“வருமான வரித்துறையினர் வீண்பழி சுமத்துகின்றனர்” - துரைமுருகன் குற்றச்சாட்டு

“வருமான வரித்துறையினர் வீண்பழி சுமத்துகின்றனர்” - துரைமுருகன் குற்றச்சாட்டு
Published on

தங்கள் வீட்டில் ஏதாவது பொருட்களை வைத்துவிட்டு புதிதாக கண்டுபிடிப்பதுபோல் வீண்பழி சுமத்துவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். வேலூர் மாவட்டம் காட்பாடி - காந்திநகரில் உள்ள துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். மேலும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் அவரது பண்ணை வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்தச் சோதனைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில் தன் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து துரை முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தேர்தலில் வெற்றி தோல்வியடைவது சகஜம். அத்துடன் அரசியலில் எதிரும் புதிருமாக நிற்பவர்கள் கருத்துபோர் புரிவது உண்டு. ஆனால் எதிர்த்து நிற்பவரை தனிப்பட்ட முறையில் பழிவாங்க நினைப்பதும், வீண்பழி சுமத்தி அவமானத்திற்கு உள்ளாக்க முயற்சிப்பதும் தற்போது ஆளும் கட்சி தரப்பில் செய்யப்பட்டுவருகிறது. அவ்வாறு நடத்தப் பட்டது தான் என் மகன் கதிர் ஆனந்த மற்றும் என்னுடைய வீட்டில் நடந்த வருமான வரி சோதனை. 

அத்துடன் மத்திய-மாநில அரசுகள் தங்களின் நடவடிக்கைகள் மூலம் எங்களைச் சுற்றி ஒரு கண்காணிப்பு வளையத்தையே உருவாக்கி எங்களை கண்காணித்து வருகின்றனர். மேலும் மத்திய மாநில அரசுகள் இன்னும் சில செயல்களில் ஈடுபடபோவதாக எங்களுக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எங்கள் வீடு மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற சோதனையில் சட்டத்திற்கு புறம்பான எந்தவொரு பொருளும் கைப்பற்றப்படவில்லை.

இதனால் அவர்களாகவே ஏதாவது பொருட்களை வைத்துவிட்டு புதியாதாக கண்டுபிடித்து எங்கள் மீது வீண்பழி சுமத்தி வருகின்றனர். இதன்மூலம் கதிர் ஆனந்தின் வெற்றியை சீர் குலைத்து விடலாம் என்று இந்த அரசுகள் நம்புகின்றன. அரசின் இத்தகைய போக்கு ஜனநாயகத்திற்கு புறம்பானது மட்டுமல்ல அதையும் கடந்த பாசிச முறையாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com