“அரசின் திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டை” - நாராயணசாமியை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆதரவு
புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் நாராயணசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அரசு நிர்வாகத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி ஆளுநர் மாளிகை அருகே முதலமைச்சர் நாராயணசாமி கறுப்பு சட்டை அணிந்து கடந்த 13-ஆம் தேதி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அதேசமயம் நாராயணசாமி போராட்டத்தை தொடங்கிய மறுநாள் அதாவது 14-ஆம் தேதி துணை ஆளுநரான கிரண்பேடி புதுச்சேரியிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஆனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும் எனக் கூறி, தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகிறார் நாராயணசாமி. அவருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். நாராயணசாமியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாராசாமி போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் நாராயணசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “ ஆளுநர் கிரண்பேடி போக்கினை கண்டிக்கக்கூடிய வகையிலும் அவரை திரும்ப பெற வேண்டும் என கோரியும் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. பல்வேறு திட்டங்களுக்கு முழுக்கு போடக்கூடிய நிலையில் ஆளுநர் கிரண்பேடி சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறார். குறிப்பாக சொல்லும் வகையில் 39 கோப்புகளில் கையெழுத்திடாமல் மக்களுக்கான நலனை தடுக்கிறார். நரேந்திர மோடிக்கும் ஜனநாயகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மாநிலத்தின் உரிமைகளை பரிக்கும் வகையில் கிரண்பேடி செயல்படுகிறார்.
புதுச்சேரி மாநிலத்தை போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றலாம் என கிரண்பேடி நினைக்கிறார். இதுவரையில் பிரதமர் இந்த பிரச்னையை கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. புதுவை மாநில மக்களை திஹார் சிறையில் கைதிகளை அடைத்து வைப்பது போல அடைத்து வைக்கலாம் என கிரண்பேடி நினைக்கிறார்.
எனவே ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

