கமல்ஹாசனை மிரட்டுவது அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல்: ஸ்டாலின் கண்டனம்
நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமர்சனங்களில் உள்ள உண்மைகளை உணர்ந்து விளக்கம் அளிப்பது தான் ஜனநாயக ஆட்சி முறைக்கு அழகு என்று தெரிவித்துள்ளார். தமிழகம் ஊழலில் மிதக்கிறது என்பதை வருவாய் புலனாய்வுத்துறை, சி.பி.ஐ, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்து அமைப்புகளும் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசின் ஊழல் குறித்த கமல் கருத்து, தமிழக மக்களின் குரல் என்றும், அதனை அடக்க முயற்சிக்கும் அமைச்சர்கள் இந்த ஆட்சியின் காலம் குறித்து உணர்ந்து தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு நிர்வாகத்தை விமர்சித்து தொடர்ந்து பேசி வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு, தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.