அழகு நிலையத்தில் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர் மீண்டும் கட்சியில் சேர்ப்பு
அழகு நிலையத்தில் பெண்ணை தாக்கியதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திமுக பிரமுகர் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டார்.
பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா. இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலத்தை சேர்ந்த திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமாருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், செல்வகுமார் சத்தியாவின் அழகு நிலையத்திற்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கியுள்ளார். இந்த சம்பவம் 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. ஆனால் இது குறித்த சிசிடிவி வீடியோ கடந்த செப்டம்பர் மாதம் வாட்ஸ் அப்பில் பரவி வைரலானது. இதையடுத்து போலீசார் செல்வக்குமாரை கைது செய்தனர்.
இதையடுத்து செல்வகுமார் கழக கட்டுபாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எஸ் செல்வகுமார் அழகு நிலையத்தில் பெண்ணை தாக்கிய சம்பவம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.