“7 பேர் விடுதலை குறித்து கருணாநிதி எழுதியது என்ன?” - முதல்வர் சூசகம்
7 பேர் முன்விடுதலைக்காக திமுக ஆட்சியில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசுதான் எனக் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரி மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மனிதச்சங்கிலியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், அமமுகவைச் சேர்ந்த வெற்றிவேல், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் திரைப்பட நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் கவுதமன், வெற்றிமாறன், பொன்வண்ணன், மனோபாலா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது இந்தப் பேரணி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. “எங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ, அந்த அதிகாரத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். எத்தனை நாட்கள் அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை பரோலில் விடுதலை செய்ய திமுக ஆட்சி முயற்சி செய்ததா?. பரோலில் விட்டார்களா?. நாங்கள்தான் பேரறிவாளனின் அப்பா உடல்நிலை கருதி பரோலில் விட்டோம். அதேபோல், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவையைக் கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஏன் திமுக அனுப்பவில்லை. அவர்கள் ஆட்சியில் இருந்தார்கள் தானே?” என்று முதல்வர் கூறினார்.
மேலும், “ திமுக நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 7 பேர் விடுதலை தொடர்பாக என்ன எழுதி வைத்திருக்கிறார் என்று என்னால் சொல்ல முடியும். மறைந்துவிட்ட காரணத்தில் நான் சொல்லவில்லை. அதில் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று நேரம் வரும் போது சொல்கிறேன். எங்களுக்கு எதுவும் தெரியாது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
திமுக 7 பேரின் விடுதலைக்காக எந்தவொரு சிரத்தையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக அந்த அமைச்சரவையில் சில முடிவுகளை எடுத்து இருக்கிறார்கள். அது பதிவுகளில் இருக்கிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். ஒருவரை மட்டும் விடுதலை செய்ய வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறார்கள். நாங்கள் மனப்பூர்வமாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கருதி நடவடிக்கை எடுத்துள்ளோம். வேண்டுமென்றே அரசியல் ஆதாயத்திற்காக சிலர் கீழ்தரமான அரசியல் செய்து வருகிறார்கள். திமுக உடன் கூட்டணியில் உள்ளவர்கள்தான் இந்தப் பேரணியை நடத்துகிறார்கள்” என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.