ஆர்.கே நகரில் தேர்தல் விதிமுறைகள் மீறல்: மருதுகணேஷ் புகார்
ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளர் மருதுகணேஷ் புகார் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். கடந்த முறை நடைபெற்று ரத்து செய்யப்பட்ட இடைத்தேர்தலின் போதும் இவர் தான் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை ஆர்.கே நகரில் செய்தியாளர்களை சந்தித்த மருதுகணேஷ், “ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலில் உள்ளன. கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒருபுறம் கடுமையான நடவடிக்கை என அறிவிக்கப்பட்டாலும், மறுபுறம் தேர்தல் விதிமீறல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வார்டு 42ல், ஏற்கனவே அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட மதுசூதனன் குடியிருக்கும் சாலையில், நேற்றிரவு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து நேற்றிரவே நாங்கள் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தோம். அதற்கு அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கூறினார்.