இன்று மாலை மீண்டும் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க கோரிய திமுகவின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் மீண்டும் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக நேற்று மாலை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கத்தை கண்டித்தும், ஆளுநர், சபாநாயகர், முதலமைச்சர் ஆகியோர் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுவதை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இந்த விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம் அளிக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்கு பின் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.