அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குக: ஸ்டாலின்
கேரளாவை போன்று தமிழகத்திலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வருவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். கேராளவில் காலியாக உள்ள 62 அர்ச்சகர் பணி இடங்களுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்துள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் உள்ள பிற கோவில்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசாணை என்பதைக் கடந்து, தனி சட்டமே நிறைவேற்றப்பட்ட நிலையிலும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க மனமில்லாத ஒரு அரசு இப்போதும் ஆட்சி செய்து வருவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதே சமூகநீதியாகும். அதனை நிலைநாட்ட, கேரள அரசிடமிருந்து தமிழக அரசு முற்போக்குப் பாடம் கற்று, உடனடியாக செயல்பட வேண்டுமென என வலியுறுத்துவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.