திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு டிச.29-ல் கூடுகிறது
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் 29-ம் தேதி கூடுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அதில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் டெபாசிட் இழந்தார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் திமுக பல ஆயிரம் கோடி ஊழல் செய்துவிட்டது என கடந்த 7 ஆண்டுகளாக திமுக மீது குற்றம்சாட்டப்பட்டு வந்தது. ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்ற நாளில் இவ்வழக்கில் திமுகவிற்கு சாதகமானத் தீர்ப்புத்தான் வந்தது. அதேசமயம் திமுகவின் பரம எதிரியாக கருதப்பட்ட ஜெயலலிதாவும் தற்போது உயிருடன் இல்லை. இந்த நேரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு ஏற்பட்டிருந்தது. ஆனால் மக்கள் திமுகவிற்கு சாதகமாக வாக்களிக்கவில்லை. இதனால் திமுக டெபாசிட் இழந்து சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அமோக வெற்றி வெற்றார்.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் வரும் 29-ம் தேதி கூடுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 29-ம் தேதி மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறும் என திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.