மக்களவைக்கு திமுக; சட்டப்பேரவைக்கு அதிமுக - யோசிக்க வைத்த வாக்காளர்கள்

மக்களவைக்கு திமுக; சட்டப்பேரவைக்கு அதிமுக - யோசிக்க வைத்த வாக்காளர்கள்
மக்களவைக்கு திமுக; சட்டப்பேரவைக்கு அதிமுக - யோசிக்க வைத்த வாக்காளர்கள்

மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் திமுகவும் வெற்றி பெற்ற தொகுதிகளில் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. 

தேர்தல் நடைபெற்ற 39 மக்களவைத் தொகுதிகளில் திமுக 38 தொகுதிகளிலும் அதிமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. அந்த ஒரு தொகுதியான தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் அதிமுக சார்பில் போட்டியிட்டார். 

இதேபோல் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. அதாவது அதிமுக வெற்றி பெற்ற மக்களவைத் தொகுதியில் திமுக சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், திமுக வெற்றி பெற்ற மக்களவைத் தொகுதிகளில் அதிமுக சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.  

அதிமுக 9 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இவை அனைத்தும் அதிமுகவை லட்சக்கணக்கு வித்தியாசத்தில் திமுக வென்ற மக்களவைத் தொகுதிகளாகும். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டு அதிமுக கூட்டணி வேட்பாளர் தமிழிசையை தோற்கடித்தார். ஆனால் இந்தத் தொகுதிக்குள் விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதி வருகிறது. இங்கு ஆரம்பம் முதலே அதிமுக முன்னிலை பெற்று வந்த நிலையில் வெற்றியும் பெற்றது. 

இதேபோல், தருமபுரி மக்களவைத் தொகுதியை திமுக கைப்பற்றியது. ஆனால் அந்தத் தொகுதிக்குள் வரும் பாப்பிரெட்டிபட்டி, அரூர் ஆகிய சட்டமன்றத்தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் கோவை மக்களவைத் தொகுதியை கைப்பற்றிய திமுக அதற்குள் வரும் சூலூர் சட்டமன்றத் தொகுதியை அதிமுகவிடம் பறிகொடுத்தது. 

திமுக வென்ற ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள் வரும் பரமக்குடி சட்டமன்றத்தொகுதியை அதிமுக வென்றுள்ளது. இதேபோல் திமுக வென்ற விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சாத்தூர், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மானாமதுரை, அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கர் ஆகிய சட்டமன்றத்தொகுதிகளை அதிமுக வென்றுள்ளது. மேலும் திமுக வென்ற திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நிலக்கோட்டை சட்டமன்றத்தொகுதியையும் அதிமுக வென்றுள்ளது. 

திமுகவில் இந்த நிலைமை என்றால் அதிமுகவிலும் அதேநிலைதான். அதிமுக ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றது. அதுவும் தேனி தொகுதி. அந்தத் தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் சட்டமன்றத்தொகுதியில் ஆரம்பம் முதலே திமுக முன்னிலை பெற்று வந்து வெற்றியும் பெற்றுள்ளது. தமிழக அரசியலின் இத்தகைய நிகழ்வுகள் பொதுமக்கள் மனதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com