தமிழகத்தில் அரசியலும் சரியில்லை, ஆட்சியும் சரியில்லை: மு.க.அழகிரி

தமிழகத்தில் அரசியலும் சரியில்லை, ஆட்சியும் சரியில்லை: மு.க.அழகிரி

தமிழகத்தில் அரசியலும் சரியில்லை, ஆட்சியும் சரியில்லை: மு.க.அழகிரி
Published on

திருவாரூரில் நடைபெற்ற மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய மு.க.அழகிரி “ திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்று பலரும் என்னிடம் கூறி வருகிறார்கள். சிலர் அன்பு கட்டளை இடுகிறார்கள். அவர்களிடம்  தேர்தல் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று தான் கூறியுள்ளேன். ஏனெனில் இடைத்தேர்தல் வேண்டாமென மேலிடத்துக்கு சிலர் கூறிவருவதாக எனக்கு தகவல் வருகிறது. இடைத்தேர்தல் நடைபெற்று நான் போட்டியிட்டால் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள செலவுத்தொகையை கூட செலவு செய்யாமல் நாம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது.

கருணாநிதியின் புகழ் அஞ்சலியில் கலந்து கொள்கின்ற இந்த நேரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை நான் முன்வைக்கிறேன். திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள வேளாண் கல்லூரிக்கு கருணாநிதியின் பெயரை வைக்க வேண்டும். அதுபோல் மத்திய பல்கலைக்கழகத்துக்கும் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “ தேர்தலில் மக்களிடம் ஓட்டு கேட்கிறேனோ இல்லையோ எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடத்தில் தெரிவிப்பேன். சொன்னதை செய்பவர் எனது தந்தையார் அதன் அடையாளமாகத்தான் நானும் எனது மகனும் இங்கே வந்திருக்கிறோம் 2014ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கருணாநிதியை அதிகம் சந்திக்கின்ற வாய்ப்பை நான் இழந்துவிட்டேன், என்னைப்பற்றி அவருக்கு நன்கு தெரியும்.” என்றார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தனிகட்சி தொடங்கும் எண்ணமில்லை என்றும் கருணாநிதியின் வழியை பின்பற்றி எதிர்காலத்தில் நடப்போம் என்றார். மேலும் ரஜினி, பாஜகவுடன் தன்னை இணைத்து வரும் அரசியல் தொடர்பான செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்றார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் அரசியலும் சரியில்லை, ஆட்சியும் சரியில்லை என கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com