உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த திங்களன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதால், திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்றும், தங்களைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்றும் கேவியட் மனுவில் குறிப்பிட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, இட ஒதுக்கீடு அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி ஏற்கனவே திமுக தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.