அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு பணம் : சிபிஐ விசாரணை கோரி திமுக முறையீடு
அதிமுக எம்எல்ஏக்களிடம் லஞ்ச பேரம் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுகவின் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையிலான அமர்வில் முறையிட்டார். சம்மந்தப்பட்ட எம்எல்ஏக்களே பேரம் குறித்து பேசியது தொலைக்காட்சிகளில் வெளியானதால், அதில் நம்பகத்தன்மை உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விஷயத்தில் பெருமளவு கருப்புப் பணம் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்க வாய்ப்புள்ளதால் அமலாக்கத் துறை விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும் என திமுக தரப்பில் வாதிடப்பட்டது. இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் மனுவாகத் தாக்கல் செய்தால் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பரிசீலிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக நேற்று ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசுவது போன்ற ரகசியமாக பதிவு செய்யப்பட்டது என்று கூறி வீடியோ ஒன்று வெளியானது. அதில், சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏ-க்கள் சசிகலா அணிக்கு ஆதரவாக வாக்களிக்க தலா ரூ.6 கோடி வரை பேரம் பேசப்பட்டது எனக் கூறியிருந்தார். இந்நிலையில் திமுக இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.