“பதவிக்காக திமுக வந்தவன் அல்ல, போராளியாக வந்தவன்” - துரைமுருகன்
தான் பதவிக்காக திமுக வரவில்லை என்றும், பதவிகள் கிடைக்காவிட்டாலும் அடிமட்ட தொண்டனாக இருந்திருப்பேன் எனவும் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் கலக்கத்தை உருவாக்க முனைவதுபோல் தனியார் நாளிதழில் வெளியிட்டிருக்கும் செய்தியை குறிப்பிட்டுள்ளார். தான் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என பதவிகள் கிடைக்கும் என்று இயக்கத்திற்கு வரவில்லை என்றும், அண்ணாவின் கொள்கையை பார்த்து போராளியாக வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் இதுவரை பெற்ற பதவிகள் கிடைக்காமல் போயிருந்தாலும், கட்சிக் கொடியை பிடித்து கோஷமிட்டுக்கொண்டே இருந்திருப்பேன் என கூறியுள்ளார். மேலும், தான் ஆசாபாசங்களுக்கு அப்பாற்றபட்ட நபர் எனவும், 60 ஆண்டுகளாக தன்னை நன்கு அறிந்தவர்கள் திமுகவினர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.