“கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தமா? இரத்தம் கொதிக்கிறது!” - ஸ்டாலின்
சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விருதுநகரில் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்றுடன் கூடிய ரத்தம் செலுத்தப்பட்டு, அவருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி, சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரத்தில், சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது கவனக்குறைவாக மருத்துவம் பார்த்து பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகாசி ஊழியர்கள் மீதும் சாத்தூர் நகர காவல்நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
இதனிடையே, மதுரை அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி தலைவர் சிந்தா தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ரத்த வங்கி ஊழியர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இது ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இரத்தம் கொதிக்கிறது! இந்த ஊழல் அரசின்கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன?
உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை இரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்! குட்கா விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுதுறை பணிகளில் ஈடுபடுவாரா?” என்று குறிப்பிட்டுள்ளது.