திமுக தலைவர் மு.கருணாநிதி நலமாக இருக்கிறார் என்று முன்னாள் திமுக அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு கருணாநிதியின் இல்லத்திற்கு வருகை தந்தது, மேலும் ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காவேரி மருத்துமனையில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஸ்டாலின், அழகிரி, கனிமொவி, தமிழரசு காவேரி மருத்துவமனைக்கு விரைந்தனர். காவேரி மருத்துவமனை அமைந்துள்ள ஆழ்வார்பேட்டையில் திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
இது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா காவேரி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது " திடீரென ஏற்பட்ட இரத்த அழுத்த குறைவு காரணமாக மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட 25 நிமிடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை.காவேரி மருத்துவமனை சார்பில் விரைவில் சிகிச்சை குறித்து அறிக்கையை வெளியிடும். தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம், கருணாநிதி நலமாக இருக்கிறார் என்றார் ஆ.ராசா.