திமுக எம்.எல்.ஏ கார் மீது மோதிய லாரி: கொலை முயற்சியா?
கோவை மாவட்டம் கள்ளிமடை பகுதியில் திமுக எம்.எல்.ஏ கார்த்திக் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் அதிஷ்டவசமாக அவர் உயிர்த்தப்பினார்.
கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ நா.கார்த்திக். இவர் கள்ளிமடை என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, திருச்சி சாலையில் பருப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது திடீரென எம்.எல்.ஏ வந்த காரில் அவர் அமர்ந்திருந்த இருக்கை அருகே மோதிய லாரி, சிறிது தூரத்திற்கு நிற்காமல் இழுத்துச் சென்றுள்ளது. இருப்பினும் இந்த விபத்தில் எம்.எல்.ஏ கார்த்திக் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து லாரி ஓட்டுநர் திவாகரனை கைது செய்த காந்திபுரம் போலீஸார், இது விபத்தா அல்லது எம்.எல்.ஏ மீதான கொலை முயற்சியா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.