திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு: ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் !
காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் சில நாட்களில் முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்கான கூட்டணியில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டிவருகின்றனர். தமிழகத்திலும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவர்மடைந்து வருகின்றன. தமிழகத்தில் அதிமுக கூட்டணி குறித்து அண்மையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதேபோல திமுகவும் தங்களின் தேர்தல் கூட்டணி குறித்து வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தொகுதி பங்கீடு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டணி குறித்து ஆலோசனை மேற்கொள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் நேற்று டெல்லி சென்றிருந்தனர். அங்கு அவர்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான அகமது பட்டேல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பிற்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர், “எங்களை மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கண்டறியுமாறு காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. நாங்கள் திங்கட்கிழமையும் கூட்டணி குறித்து ஆலோசனை செய்யவுள்ளோம். அதன்பின்னர் தான் திமுகவுடனான தொகுதி பங்கீடு முடிவாகும்”எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே வெளியாகியிருக்கும் தகவலின்படி திமுக காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 8 இடங்களும் மற்றும் புதுச்சேரியிலிருக்கும் 1 இடமும் ஒதுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் காங்கிரஸ் கட்சி முக்கியமாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.