“தங்கத் தமிழ்ச்செல்வனுடன் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் சதி” - கே.பி. முனுசாமி
அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க அமமுகவின் தங்கத் தமிழ்ச்செல்வனுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது தற்போது தெரிய வந்திருப்பதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வரும் மே19 ஆம் நாள் மேலும் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தின் முக்கியக் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் முடிவுகள் மற்றும் அதற்கு அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்து அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “திமுகவும் அமமுகவும் சேர்ந்தால்தான் ஆட்சியை அகற்ற முடியும். 22 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெருவோம். நாங்கள் வெற்றிப்பெற்றவுடன் அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம். ஆட்சியை அகற்றுவதற்கு திமுக எங்களை ஆதரிக்க வேண்டும். அதற்கு திமுக எங்களை ஆதரிக்கவில்லையெனில் அவர்கள் எங்களை பார்த்து பயந்ததாக அர்த்தம்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, “அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க திமுக தலைவர் ஸ்டாலின் சதி செய்கிறார். ஆட்சியைக் கவிழ்க்க பல கட்சிகளுடன் இணைந்து ரகசிய ஆலோசனை நடத்தியிருக்கிறார். தற்போது பெயர் சொல்ல விரும்பாத நபருடனும் ஸ்டாலின் ரகசியமாக பேசி வருகிறார்” எனக் கூறினார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன், “ஒரே கருத்து கொண்ட கட்சிகள் இணைவதில் தவறில்லை” என்றார்.