டெங்கு பாதிப்பை சுகாதாரப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: திமுக தீர்மானம்
டெங்கு காய்ச்சல் பாதிப்பை சுகாதாரப் பேரிடர் என அறிவித்து மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டெங்கு பாதிப்பில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றும் வகையில், சுகாதாரப் பேரிடர் எனக் கருதி, மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏதாவது சாக்குபோக்கு சொல்லி மேலும் காலம் தாழ்த்தாமல், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம், நீட் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசிடம் தமிழக அரசு தாரைவார்த்துவிட்டதாகக் கூறி கண்டனம் தெரிவித்தும் திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.