ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது: சுதீஷ் பேட்டி
விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்ததைப் போல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், மக்களின் ஆதரவு இல்லாத அதிமுக, எதிர்வரும் தேர்தல்களில் தோல்விகளையே சந்திக்கும் என்றார். அதிமுகவை மத்திய அரசு பின் நின்று இயக்குவதாகவும் அவர் சூசகமாக குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், "இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு கிடைத்திருந்தாலும் கூட நிச்சயம் வருகின்ற தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும். விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்ததைப் போல ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது. எல்லாமே மேலே இருந்துதான் நடைபெறுகிறது. ஆனால் அதற்கும் மேலே ஒருவர் இருக்கிறார். நிச்சயம் அடுத்த தேர்தலில் மக்கள் அதிமுகவை புறக்கணிப்பார்கள்" என்றார்.