அமித்ஷாவின் வியூகத்தை முறியடித்த சிவக்குமார் - யார் இவர்?
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறிவந்த நிலையில், எதிர்பாராத விதமாக எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால், பல்வேறு திருப்பங்களுடன் அதிரடியாக பயணித்து வந்த கர்நாடக அரசியல் களம் தற்போது முடிவை எட்டியுள்ளது. கடைசியில் காங்கிரஸ் கட்சியினர் இப்பொழுதுதான் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். கூடவே குமாரசாமியும்.
காங்கிரஸ் கட்சியினர் தரப்பில் அவர்களது எம்.எல்.ஏக்களை பாதுகாத்து முக்கிய பங்காற்றியது அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார்தான். காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், பாஜவின் வியூகங்களை வீழ்த்தும் முழு பொறுப்பும் சிவக்குமார் வசம்தான் ஒப்படைக்கப்பட்டது. சிவக்குமார் தனது சகோதரர் சுரேஷ்குமாரிடம் எம்.எல்.ஏக்களை கண்காணிக்கும் பொறுப்புகளை கொடுத்திருந்தார். அவர்தான் ஈகிள்டன் ரிசாட்டில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அரணாக இருந்து பாதுகாத்தார். எம்.எல்.ஏக்களை பாதுகாக்க ஐதராபாத்திற்கு அழைத்துச் சென்றது உள்ளிட பல்வேறு வியூகங்களை சிவக்குமார்தான் வகுத்துள்ளார். இதில், சித்தராமையாவுக்கு கூட எவ்வித பங்களிப்பும் இல்லையென்றுதான் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மாயமானதாகக் கூறப்படும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் சிவக்குமார் தான் எப்படியோ சட்டசபைக்கு கொண்டுவந்தார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குஜராத் மாநிலங்களவை தேர்தலின் போது 44 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூருக்கு அருகில் உள்ள இந்த ஈகிள்டன் ரிசாட்டில் தான் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்பொழுது முழு பொறுப்பும் சிவக்குமார் வசம்தான் இருந்தது. அதேபோல், 2002ம் ஆண்டு மகாராஷ்டிரா முதலமைச்சராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளானார். அப்பொழுது, மும்பையில் இருந்து அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் பெங்களூருக்கு சிவக்குமார்தான் அழைத்துவந்தார். இதன் மூலம் ரிசாட் அரசியல் என்றால் இனி சிவக்குமார் பெயர் தான் அடிபடும்.
எடியூரப்பா ராஜினாமா செய்துள்ள நிலையில் குமாரசாமி அடுத்ததாக முதல்மைச்சராக பொறுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பொழுது, சிவக்குமாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பேச்சுகள் அடிபடுகின்றன.
சிவக்குமார் தனது முதல் சட்டப்பேரவை தேர்தலிலே தேவ கவுடாவை எதிர்த்து போட்டியிட்டார். அப்போது அவருக்கு 25 வயதுகூட இல்லை. பின்னர், 1989ம் ஆண்டு தேர்தலில் சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டு, தனது 30வது வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார். எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், சித்தராமையா அரசில் எரிசக்தி துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இனி கர்நாடக அரசியலை தாண்டி சிவக்குமார் கவனிக்கப்படும் ஒரு காங்கிரஸ் தலைவராக வலம் வருவார் என்றே தெரிகிறது.